திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் வருமாறு: வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, கட்டுமான தொழிலாளர்களுக்குப் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ.5,000 போனஸ் வழங்க வேண்டும். 55 வயது கடந்த பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத் தொகையை ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 1-ஆம் வகுப்பு முதலே கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். மேலும், தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை இரட்டிப்பாக (Double) உயர்த்தி வழங்க வேண்டும். பணியின் போது விபத்தில் சிக்கிப் படுகாயமடையும் தொழிலாளர்களுக்கு முறையான மருத்துவ காப்பீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும்.
தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அதற்கான மானியத் தொகையைத் தாமதமின்றி வழங்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தக் கூடாது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். “கட்டுமானத் தொழில் நலிவடைந்து வரும் நிலையில், அரசு எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” எனச் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

















