துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்கு செலுத்தியவுடன், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டுச் சென்றார்.
இந்தாண்டு வடமாநிலங்கள் பலவற்றில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன; வீடுகள், சாலைகள், சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ள நிலையில், மத்திய அரசின் உதவியை அவை எதிர்பார்த்து வருகின்றன.
இந்நிலையில், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் நிலவும் வெள்ளநிலையை நேரில் ஆய்வு செய்யப் பிரதமர் மோடி இன்று புறப்பட்டுள்ளார். காலை துணை ஜனாதிபதி தேர்தலில் முதல் நபராக வாக்களித்த அவர், சில நிமிடங்களில் ஹிமாச்சல் பயணத்தைத் தொடங்கினார்.
தனது X தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய ஹிமாச்சல், பஞ்சாபுக்கு புறப்பட்டுச் செல்கிறேன். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோளாக மத்திய அரசு நிற்கும்” என தெரிவித்துள்ளார்.