டோக்கியோ: ஜப்பான் அரசு முறை பயணத்தில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் புல்லட் ரயிலில் பயணம் செய்தார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவும் இணைந்தார்.
இரு நாட்கள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து, டோக்கியோவில் 16 மாகாண கவர்னர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இதையடுத்து, டோக்கியோவில் இருந்து சென்டை நோக்கி புல்லட் ரயிலில் பயணித்தார். அப்போது ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவும் அவருடன் பயணித்தார். இந்த அனுபவத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். அதேபோல், ஷிகெரு இஷிபாவும், “இந்திய பிரதமர் மோடியுடன் புல்லட் ரயில் பயணம் தொடங்கியது. சென்டை நோக்கி ஒன்றாகச் செல்கிறோம்” என்று குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சென்டை வந்த பிரதமர் மோடிக்கு அங்குள்ள மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். மேலும், ஜப்பான் ரயில்வேயில் சிறப்பு பயிற்சி பெற்று வரும் இந்திய ரயில் ஓட்டுநர்களையும் அவர் சந்தித்து உரையாடினார்.
ஜப்பான் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, இன்று (ஆகஸ்ட் 30) சீனாவுக்கு புறப்பட்டு அங்கு இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

















