பிரதமர் நரேந்திர மோடி, 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் மற்றும் சீனாவிற்கு இன்று புறப்படுகிறார். இந்த பயணத்தின் போது, இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பல்வேறு துறைகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.
முதலில் ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா-ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது. 15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
2014இல் பிரதமராக பதவியேற்ற பிறகு, இது 8வது முறையாக பிரதமர் மோடி ஜப்பான் செல்லும் நிகழ்வாகும். ஜப்பான் பயணத்தை முடித்த பின், வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிகளில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட பல நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். 2018இல் இந்தியா-சீனா படைகள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கின்றது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.