தியான்ஜின்: இந்தியா–ரஷ்யா உறவு உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அவசியமானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒரே காரில் பயணம்
பேச்சுவார்த்தைக்காக மோடியும், புடினும் ஒரே காரில் இணைந்து பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எண்ணெய் தொடர்பாக அமெரிக்கா விதித்த 25% அபராத வரி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது :
“மிகவும் சிரமமான காலங்களிலும், இந்தியா–ரஷ்யா உறவு வலுவாகவே தொடர்கிறது.
இந்த நெருக்கமான உறவு உலக அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது.
உக்ரைன் பிரச்சினையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிகளை இந்தியா வரவேற்கிறது.
அனைத்து தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால், நிரந்தர அமைதி நிலைநிறுத்தப்படும். இது மனிதகுலத்தின் பொதுவான வேண்டுகோள்,” என அவர் வலியுறுத்தினார்.
புடின் வருகை
மேலும், “இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகை தரவுள்ளார். அவரது பயணத்துக்காக இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

















