பிரேசிலியா (பிரேசில்) :
பிரேசில் அரசின் அழைப்பின்பேரில் அந்நாட்டின் தலைநகரான பிரேசிலியாவுக்கு அரசுமுறை பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடியுக்கு வரவேற்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக, பிரேசிலின் மிக உயரிய குடிமை விருதான “Grand Collar of the National Order of the Southern Cross” விருது, அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவால் வழங்கப்பட்டது.
இந்த விருது, பிரதமர் மோடியின் இந்தியா-பிரேசில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், ஜி20 மற்றும் BRICS போன்ற உலகளாவிய அமைப்புகளில் இந்தியாவின் முக்கியத்துவமான பங்கு வழிகாட்டியதற்குமான அங்கீகாரமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

விருதை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, “இந்த விருது எனது தனிப்பட்ட சாதனை மட்டும் அல்ல. இது 140 கோடி இந்தியர்களுக்குரிய பெருமை. இந்தியா – பிரேசில் உறவின் வலிமையும், இரு மக்களுக்கும் இடையேயான பாசத்தையும் இது பிரதிபலிக்கிறது,” என்றார்.
மேலும், தனது சமூக ஊடக பக்கத்தில் அவர், “பிரேசில் மக்கள், இந்திய மக்களிடம் கொண்டிருக்கும் நம்பிக்கை, நேசத்திற்கான சின்னமே இந்த விருது. எதிர்காலத்தில் நமது நட்பு மேலும் பலத்ததும் பயனுள்ளதுமானதாக வளரட்டும்,” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசுமுறை பயணத்தின் போது, இந்தியா – பிரேசில் நாடுகள் இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் ஒத்துழைக்க ஒப்பந்தங்கள் கைச்சாத்தானது.
பிரதமராக பதவியேற்ற மே 2014 முதல் இன்று வரை, பிரதமர் மோடிக்கு மொத்தமாக 26 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.