வேளாண் மாநாட்டிற்கு இன்று கோவை வருகிறார் பிரதமர் மோடி !

கோவை : தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் வேளாண் மாநாட்டை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு கோவை முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமரின் கோவை வருகை

பிரதமர் மோடி பிற்பகல் 1.25 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து, பின்னர் 1.45 மணிக்கு கொடிசியா அரங்கில் நடைபெறும் மாநாட்டு தளத்திற்கு செல்வார்.
அங்கு, விவசாயிகள் கெளரவ நிதி திட்டத்தின் 21-ஆவது தவணையாக ₹18,000 கோடி ரூபாயை வெளியிட உள்ளார். இதன்படி 9 கோடி விவசாயிகளுக்கு தலா ₹2,000 நேரடியாக வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

இதுவரை 20 தவணைகளாக வெளியிடப்பட்ட இந்த திட்டத்துக்கு ஒவ்வொரு தவணைக்கும் மத்திய அரசு சுமார் ₹18,000 கோடி செலவிடுகிறது.

அதன்பின் இயற்கை வேளாண் துறையில் சாதனை படைத்த 10 விவசாயிகளுக்கு பிரதமர் விருது வழங்க இருக்கிறார். மேலும், மாநாட்டை ஒட்டி அமைக்கப்பட்ட 200-க்கு மேற்பட்ட அரங்குகளையும் பிரதமர் பார்வையிடுவார். பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு, அவர் 3.45 மணிக்கு கொடிசியாவில் இருந்து புறப்பட்டு, 3.55 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து டெல்லி திரும்புவார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பிரதமரின் பயணத்தை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் கோவை முழுவதும் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன. விமான நிலையத்துக்குள் வரும் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெளியேற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கருப்பு கொடி போராட்டம் குறித்து வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

பிரதமரின் தமிழக வருகையின்போது கருப்பு பலூன், கருப்புக் கொடி போராட்டத்தை அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாஜக மகளிரணி மாநில தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இத்தகைய போராட்டங்களுக்கு திமுக மற்றும் திக ஆதரவாக உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்ப்பு

வேளாண் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறியதாவது :

விதைகள் மசோதா 2025, மின்சார மசோதா 2025

இரண்டு மசோதாக்களையும் மத்திய அரசு சட்டமாக்கத் திட்டமிட்டுள்ளது ; இவை விவசாய எதிர்ப்பை அதிகரிக்கும் என அவர் குற்றம்சாட்டினார்.
“விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளை செய்பவராக இருக்கும் பிரதமர், எந்த முகத்துடன் மாநாட்டில் கலந்துகொள்ள வருகிறார்?” என சண்முகம் கேள்வி எழுப்பினார்.

பிரதமரைச் சந்திக்க உள்ள கே. பழனிசாமி

இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலர் கே. பழனிசாமி இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார். வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் பிரதமரைச் சந்திக்கிறார் என தகவல்.

பிற கூட்டணி கட்சித்தலைவர்களும் மோடியைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர். பிஹார் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நடைபெறும் இந்த சந்திப்பு, தமிழக அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “சந்திப்புப் பற்றி சஸ்பென்ஸ்… பொறுத்திருந்து பாருங்கள்” என கருத்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version