கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண்மையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தில், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் தொடங்கி வைத்தார்.
ஆந்திரப் பிரதேசம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பிரதமர், கொடிசியாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநாட்டுக்கு அதிகாரப்பூர்வ துவக்கத்தை வழங்கினார். இயற்கை விவசாயிகள் அமைத்திருந்த கண்காட்சித் தளங்களை நேரில் பார்வையிட்ட அவர், இயற்கை முறையில் விளையும் பயிர்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிய விளக்கங்களையும் கேட்டறிந்தார்.
மாநாட்டில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கினார். இதன் போது ‘பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி’ திட்டத்தின் 21வது தவணை நிதியாக ரூ.18 ஆயிரம் கோடி தொகையை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த தவணையில் நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகள் பயன்பெறவுள்ளனர்.
கோவை விமான நிலையம் வந்த பிரதமரை, கவர்னர் ரவி, மாநில அமைச்சர் சாமிநாதன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து கொடிசியாவுக்கு காரில் பயணம் செய்த பிரதமருக்கு வழியெங்கும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

















