பிரதமர் மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கி கவுரவிப்பு!

புதுடில்லி : டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி அவரை கவுரவித்தனர்.

விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த விழா, ஆச்சாரிய வித்யானந்த் மகராஜரின் 100வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்று வந்தது. இந்த விழாவை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை (ஜூன் 28, 2025) தொடங்கி வைத்தார். மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் மற்றும் பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளை இணைந்து இதை ஏற்பாடு செய்திருந்தன.

இவ்விழா 2025 ஜூன் 28 முதல் 2026 ஏப்ரல் 22 வரை நாடு முழுவதும் நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக, ஆச்சாரியர் வித்யானந்த் மகராஜரின் வாழ்க்கை, பணிகள் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு கலாச்சார, இலக்கிய, கல்வி மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

யார் இந்த ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் ?

ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ், கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் என்ற கிராமத்தில் 1925 ஏப்ரல் 22 அன்று பிறந்தார். இளம் வயதிலேயே தீட்சை பெற்று சமண மதத்தில் தீவிரமான பங்களிப்பை வழங்கியவர்.

8,000க்கும் மேற்பட்ட சமண ஆகமங்களை மனப்பாடம் செய்த அவர், சமண அறிஞர்களில் முன்னணியில் வருகிறார். சமண தரிசனம், அனேகாந்தவாதம், மோக்ஷமார்க்கம் ஆகிய தத்துவங்களை அடிப்படையாக கொண்டு, 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

கயோத்சர்க தியானம் மற்றும் பிரம்மச்சரிய வாழ்வை கடைபிடித்து, பல ஆண்டுகளாக காலணி இன்றி நடைபயணம் செய்து நெடுநாட்டில் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

1975 ஆம் ஆண்டு, பகவான் மகாவீரரின் 2500வது பிறந்த நாளையொட்டி, அனைத்து முக்கிய சமணப் பிரிவுகளின் ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வ சமணக் கொடி மற்றும் சின்னத்தை உருவாக்கி அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version