காத்மாண்டு: நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாகவும் தீவிரமாக நீடித்து வருகிறது. போராட்டக்காரர்கள் அமைச்சர்களின் வீடுகளுக்கும், அரசியல் கட்சி அலுவலகங்களுக்கும் தீ வைத்து எரித்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.
சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, ஊழல் நிர்வாகம் மற்றும் வேலையின்மை பிரச்சினைகளை முன்வைத்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர், வேளாண்மை அமைச்சர் ஆகியோர் பதவி விலகினர். இதனிடையே பிரதமர் சர்மா ஒலி, சமூக வலைதளங்களுக்கான தடையை நீக்குவதாக அறிவித்தார்.
ஆனால், போராட்டம் இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஒலி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து கற்களை எறிந்து காவல்துறையினரை விரட்டியடித்தனர்.
மேலும் காத்மாண்டுவில் உள்ள நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகமும், லலித்பூரில் உள்ள அமைச்சர் பிரித்வி சுபா குருங்கின் வீட்டும் போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன. முன்னாள் பிரதமர் பிரசன்டாவின் வீடும் தாக்குதலுக்குள்ளானது.
இதற்கிடையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் பிரதமர் சர்மா ஒலி, இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். “இந்த கடினமான சூழலில் மக்கள் அமைதி காக்க வேண்டும்,” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில், காத்மாண்டுவிலுள்ள பிரதமர் சர்மா ஒலியின் வீட்டிற்கே போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் நிலைமை மேலும் பரபரப்பாகியுள்ளது.