ஜனாதிபதி திரௌபதி முர்முவின் 14 கேள்விகள் : உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு – ஸ்டாலின் கண்டனம்

சென்னை :

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காத விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142ன் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. மேலும், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் கால வரம்பையும் தீர்ப்பில் குறிப்பிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராகவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் வெளிவரம்புகளை கடந்துவிட்டதா என்பது குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திரௌபதி முர்முவின் முக்கிய கேள்விகள்:

ஆளுநர், அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்பட வேண்டியதா?

பிரிவு 200, 201, 143 போன்றவை ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் எந்த அளவு அதிகாரங்களை வழங்குகின்றன?

நீதிமன்றம் சட்டம் இயற்றும் செயல்முறைகளில் காலக் கெடு விதிக்கலாமா?

சட்டமாக்கப்படாத மசோதாவில் நீதிமன்றம் தலையீடு செய்யலாமா?

பிரிவு 142ன் கீழ், உச்சநீதிமன்றம் அரசியல் அதிகாரங்களை மாற்ற முடியுமா?

ஸ்டாலின் கண்டனம் :

இந்த கேள்விகளை வலுவாகக் கண்டித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது :

“மத்திய அரசின் குடியரசுத் தலைவர் குறிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தகர்க்கும் முயற்சி. பாஜக இல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு திட்டமிடுகிறதா என சந்தேகம் எழுகிறது. அரசமைப்பை பாதுகாக்க, பாஜகவல்லாத மாநிலங்கள், கட்சித் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். குடியரசுத் தலைவரின் கேள்விகள், மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தலாகும்.”

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பதிலுக்கு எதிரொலியாக, பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version