மார்கழி மாதம் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதாலும், அதனையடுத்து வரும் பொங்கல் பண்டிகையாலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வண்ணமயமான கோலங்களைப் போடுவதற்காக அதிக அளவில் கோலப்பொடிகளை வாங்கிச் செல்வதால், சாத்தூரில் கலர் கோலப்பொடி தயாரிக்கும் பணிகள் தற்போது இரவு, பகலாகத் தீவிரமடைந்துள்ளன.
சாத்தூரில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் கோலப்பொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் இதுகுறித்துத் தெரிவித்ததாவது: “நாங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கலர் கோலப்பொடி தயாரிக்கும் பணியைச் செய்து வருகிறோம். பொதுமக்கள் தங்களின் தேவைக்கேற்ப வாங்கிச் செல்லும் வகையில், ரூ. 5 பாக்கெட்டிலிருந்து ரூ. 50 பாக்கெட் வரையிலான பல்வேறு அளவுகளில் கோலப்பொடிகளைத் தயாரித்து வருகிறோம்.”
தற்போது மார்கழி மற்றும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பலவிதமான வண்ணங்களில் கோலப்பொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வெள்ளை, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, ரோஸ், ஊதா, கருப்பு, நீலம், வயலட், சிவப்பு, உள்ளிட்ட அனைத்து வண்ணங்களிலும் கோலப்பொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பொங்கல் பண்டிகை நெருங்குவதால், ஏராளமானோர் இந்த வண்ணக் கோலப்பொடிகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கிச் செல்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மார்கழி மாதத்தின்போது, அதிகாலையில் தெருக்களில் பெண்கள் வண்ணக் கோலங்கள் போட்டு இறைவனை வழிபடுவது வழக்கம். இந்த பாரம்பரியத்தை முன்னிட்டு, சாத்தூரில் கோலப்பொடி தயாரிப்புத் தொழில் சூடுபிடித்துள்ளது.
