தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், மதுரை மாவட்டம் கிடாரிப்பட்டி அருகே உள்ள சுந்தரராஜன்பட்டியில் பொங்கல் பானை விற்பனை இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது. நவீன கால மாற்றத்தில் எவர்சில்வர் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபடுவதையே மக்கள் இன்றும் பெருமையாகக் கருதுகின்றனர். அந்த வகையில், சுந்தரராஜன்பட்டி பகுதியில் தயாரிக்கப்படும் மண்பானைகளுக்குத் தனித்துவமான சிறப்பும், வரவேற்பும் உள்ளது.
இப்பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளி நல்லையன் (54), இப்பானைகளின் சிறப்பம்சங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார். அழகர்கோவில் மலையிலிருந்து வழிந்தோடி வரும் மூலிகை நீர் தேங்கும் தேர்குன்றம், பொட்ட முத்தன் மற்றும் பல பட்டறை கண்மாய்களில் இருந்து சேகரிக்கப்படும் பிரத்யேக மணலைக் கொண்டே இந்தப் பானைகள் உருவாக்கப்படுகின்றன. இந்த மூலிகை மண் கலவையால் செய்யப்படும் பானைகளில் பொங்கல் வைக்கும்போது, அதன் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதன் காரணமாகவே, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி காரைக்குடி, தேவகோட்டை, மதுரை நகர் மற்றும் சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சுந்தரராஜன்பட்டிக்கு நேரில் வந்து போட்டி போட்டுக்கொண்டு பானைகளைக் கொள்முதல் செய்து செல்கின்றனர். மக்களின் தேவைக்கேற்ப சிறிய அளவிலான கால் படி பானை முதல் பெரிய அளவிலான ஒரு படி பானை வரை பல்வேறு அளவுகளில் இவை கிடைக்கின்றன. தரத்திற்கு ஏற்றவாறு ஒரு பானை 60 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. “வருடம் முழுவதும் மற்ற மண்பாண்டங்களைச் செய்தாலும், மார்கழி மாதத்தில் பொங்கல் பானைகளை உருவாக்குவதில் கிடைக்கும் மனநிறைவே தனி” என்கிறார் நல்லையன். மண்பாண்டத் தொழிலை நசுங்கவிடாமல் காக்கும் இத்தகைய கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான பானைகள், இந்த ஆண்டு பலரது வீடுகளிலும் பொங்கல் பொங்கத் தயாராகக் காத்திருக்கின்றன.

















