தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, கோவையில் இன்று அளித்த பேட்டியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நலத்திட்ட உதவிகளை ‘கடைசி அஸ்திரம்’ என்று விமர்சித்ததுடன், உள்ளாட்சித் துறையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி, தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
உள்ளாட்சித் துறையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து, அமலாக்கத் துறை (ED) கடந்த அக்டோபர் 2025-ல் தமிழக காவல்துறை டிஜிபிக்குக் கடிதம் எழுதியிருந்தது. அதில், 150 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு, வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆதாரங்களையும் இணைத்துக் கொடுத்திருந்தது. அமலாக்கத் துறை இவ்வளவு ஆதாரங்களைக் கொடுத்தும், இதுவரை தமிழக காவல் துறை எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை டிசம்பர் 3-ம் தேதி மீண்டும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளது. 258 பக்கங்கள் கொண்ட இந்தக் கடிதத்தில், அமைச்சர் நேரு தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறைகளில் ₹1020 கோடி ரூபாய் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பொறியாளர்களைப் பணியமர்த்தியதில் ஒரு பொறியாளரிடம் ₹25 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை லஞ்சமாகப் பெறப்பட்டு, மொத்தம் ₹882 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறையில் நடந்த ஊராட்சிச் செயலாளர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு குறித்தும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்: எழுத்துத் தேர்வு நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகத் தேர்வர்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. இந்தத் துறையின் இணையதளத்தில் நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் பல குளறுபடிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உதாரணமாக, கோவையைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண் ஒருவர் 500 மதிப்பெண் களுக்கு 494 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அதே வகுப்பைச் சேர்ந்த 496 மதிப்பெண்கள் பெற்ற மற்றொரு வர் தோல்வி அடைந்துள்ளார்.
எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது குறித்து வெளிப்படைத் தன்மை இல்லை என்றும், கோவை, மதுரை, கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் பட்டியலைப் பகிர்ந்துள்ளதாகவும், இதிலும் லஞ்சம் கைமாறி இருப்பதாகத் தெரிவதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்தும் அண்ணாமலை முக்கியமான தகவலை வெளியிட்டார்:
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் இதுவரை 77 லட்சம் பேர் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 12.5% வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் கூட. கடந்த தேர்தல்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்ட பிறகும் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்தத் திருத்தப் பணியின் முதல் கட்ட வெற்றி இது என்றும், தமிழகத்தில் இனி 5.6 கோடி வாக்காளர்கள் தான் இருப்பார்கள் என்றும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
வரும் தேர்தல்கள் குறித்த தமது கருத்தைப் பகிர்ந்த அண்ணாமலை: பொங்கல் தொகுப்புக்கு ₹3000 கொடுப்பது, மகளிர் உரிமைத் தொகை வழங்குவது போன்றவை தான் முதலமைச்சர் ஸ்டாலினின் ‘கடைசி அஸ்திரம்’ ஆகும். ஆனால், வரும் தேர்தல்களில் தமிழக மக்கள் தெளிவான முடிவெடுப்பார்கள் என்று அவர் கூறினார். அடுத்த தேர்தலைப் பொறுத்தவரை இப்போதைக்கு திமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, விஜய் (தமிழக வெற்றிக் கழகம்), மற்றும் சீமான் (நாம் தமிழர் கட்சி) என நான்கு முனைப் போட்டி இருப்பதாகவும், இது கடைசி நேரத்தில் மாறுவதற்குக் கூட வாய்ப்புள்ளது என்றும் அண்ணாமலை கூறினார்.

















