பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுடன் அமைச்சர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதிலும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், “அனுமதி இன்றி நடைபாதையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த முடியாது” போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், தூய்மை பணியாளர்களை இன்று மாலை சந்திக்க திட்டமிட்டிருந்த தமிழக பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனை, அவரது வீட்டிலிருந்தே வெளியே வராமல் தடுக்க முயன்றதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்,
“திமுக-வின் தேர்தல் வாக்குறுதி எண் 285-ன் படி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தூய்மை பணியாளர்களை இன்று மாலை தமிழிசை சௌந்தரராஜன் சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் திமுக அரசு அவரை வீட்டிலேயே தடுத்து நிறுத்தியது.
இது அடக்குமுறை செயலாகும். பொதுமக்களின் நலனுக்காகப் போராடும் அரசியல் தலைவர்களை திமுக அரசு ஒடுக்க முயல்வது ஜனநாயகப் படுகொலை.
தூய்மை பணியாளர்களின் துயரங்களுக்கு செவிமடுக்காத திமுக அரசு, அவர்களுக்கு ஆதரவாக நிற்போரைத் தடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. ஜனநாயகக் குரல்களை நெரிக்கும் இந்த அரசுக்கு விரைவில் மக்கள் முடிவு கட்டுவார்கள்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.