மாதம்பட்டி ரங்கராஜிடம் போலீஸ் விசாரணை – ஜாய் கிரிசில்டா புகாரில் அடுத்து என்ன ?

பிரபல சமையல் கலைஞரும், நிகழ்ச்சி நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜை, திருமண மோசடி குற்றச்சாட்டில் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா, “ரங்கராஜ் தன்னை கோவிலில் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார். தற்போது ஆறு மாத கர்ப்பமாக உள்ளேன்” என்று புகார் அளித்திருந்தார். திருமண நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு, ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் மனைவியுடன் பிரிந்து வாழ்கிறார் என கூறப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜாய் கிரிசில்டாவுடன் லிவ்-இன் உறவில் இருந்ததாக தகவல்கள் வெளிவந்தன. ஜாய் கிரிசில்டாவுக்கும் முன்னர் ஜே.ஜே. ஃபிரெடிக் என்பவருடன் திருமணம் செய்து ஒரு குழந்தை உள்ளார்.

இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் பேரில், சென்னை காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்படி, இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவில் நான்கு மணி நேரம் விசாரணைக்கு ஆஜரானார்.

அதன்பிறகு, மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீசார் சம்மன் அனுப்பி, நேரில் ஆஜராகுமாறு அறிவித்தனர். அதன்படி, நேற்று மாலை அவர் குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வந்து, துணை ஆணையர் வனிதா முன்னிலையில் சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்கு ஆஜரானார்.

ரங்கராஜின் விளக்கங்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர் வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து போலீசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Exit mobile version