திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூண் தொடர்பான விவகாரத்தில், மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுகள் அமல்படுத்தப்படாத நிலையில், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து நீடிக்கிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு செயல்படுத்தப்படாத நிலையில், இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் சென்று கார்த்திகை தீபம் ஏற்றவும், அதற்கு மத்தியப்படை பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவும் களத்தில் செயல்படுத்தப்படவில்லை. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்காக அனைவரும் காத்திருக்கும் இத்தகைய சூழ்நிலையில், திருப்பரங்குன்றம் அடிவாரத்திலும், மலை உச்சியிலும் தொடர்ந்து கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்வதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மலை உச்சியில் இருக்கும் தர்காவுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மலை உச்சியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்வதற்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மலை ஏற வேண்டும் என்று வந்த அனைத்துப் பொதுமக்களையும் போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். தற்போது மலை உச்சியில் இருக்கும் தீபத்தூண் மற்றும் தர்கா ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

















