தமிழ் இலக்கிய உலகை துயரத்தில் ஆழ்த்தும் வகையில், சிறந்த கவிஞரும் பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளருமான ஈரோடு தமிழன்பன் இன்று காலமானார். 92 வயதான அவர் சில காலமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற ‘வணக்கம் வள்ளுவ’ நூலின் படைப்பாளரான தமிழன்பன், மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ போன்ற பல்வேறு கவிதை வடிவங்களில் தனித்துவமான பங்களிப்பைச் செய்தவர். கவிஞர் மட்டுமின்றி, சிறுகதை, புதினம், நாடகம், சிறார் இலக்கியம், வாழ்க்கை வரலாறு, ஓவியம் உள்ளிட்ட துறைகளிலும் தடம் பதித்த பல்துறை நிபுணராக விளங்கினார். திரைப்பட பாடல் எழுத்தாளர் மற்றும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதோடு, தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினராகவும், அறிவியல் தமிழ் மன்றத்தில் உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.
அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, “மரபுக் கவிதை முதல் புதுக்கவிதை வரை பரந்த களத்தில் தமிழுக்கு வளம் சேர்த்தவர் தமிழன்பன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதையடுத்து, முதலமைச்சர் நேரடியாக அவருடைய இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட இலக்கியவாதிகள், அரசியல் மற்றும் கலையுலக பிரபலங்கள் பலரும் ஈரோடு தமிழன்பன் மரணத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
















