“தமிழகம், உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டுமென்றால், அதற்குத் தமிழகத்தை ஆளும் அரசில் பா.ம.க. பங்கேற்பது அவசியம்” என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க.வின் 37-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் மேலும் கூறியதாவது :
“வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம். ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம். பா.ம.க. இந்த மண்ணில் பிறந்த நாள் இன்று. சமூக நீதி மற்றும் மக்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் தான் பா.ம.க.”
தமிழ் மொழி, இனம், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்கும் இயக்கமாக பா.ம.க. செயல்பட்டு வருவதாகவும், தமிழக மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்த்து காக்கும் அரணாக பா.ம.க. இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
“தமிழகம், இந்தியாவின் முன்னணி மாநிலமாக மட்டுமல்லாமல், உலக நாடுகளுடன் போட்டியிடும் வளர்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றால், அதற்கான ஆட்சி பொறுப்பில் பா.ம.க. இடம் பெற வேண்டும். அது எங்கள் உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்காக, நமது இயக்கத்தின் வெற்றிப் பயணத்தை வேகமாக முன்னெடுப்போம்” என அவர் உறுதிமொழி எடுத்துள்ளார்.