பாமகவில் தந்தை–மகன் மோதல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், கட்சியின் தலைமை பதவியிலிருந்து அன்புமணியை நீக்கியது குறித்து நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளர். இது பாமகவுக்குள் ஏற்பட்டுள்ள அகில இந்திய அளவிலான அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
இருவருக்கும் இடையே உருவாகியுள்ள கருத்துப் பிழைப்பு காரணமாக, சமாதான முயற்சியில் ஈடுபட்ட மூத்த நிர்வாகிகளின் பேச்சுவார்த்தைகள் பலனளிக்காத நிலையில், ராமதாஸும், அன்புமணியும் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகள் வழங்குவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த உள்கட்சிப் போராட்டம் நடைபெறும் நேரத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி பாமகவின் நிலைப்பாடு குறித்து தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர். சிலர் மாற்றுக் கட்சிகளில் இணையத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஜூலை 5ஆம் தேதி தைலாபுரத்தில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அந்த கூட்டத்தில், அன்புமணியை நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதனுடன், ராமதாஸின் அதிகாரப்பூர்வ லெட்டர்பேடிலிருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டது.
இதையடுத்து, ஜூலை 8ஆம் தேதி திண்டிவனம் அருகே ஓமந்தூரில் நடைபெற்ற பாமக மாநில செயற்குழு கூட்டத்திலும், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக, கட்சியில் கூட்டணிகள் உட்பட அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் நிறுவனர் ராமதாஸுக்கே உண்டு என்றும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட அன்புமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர் உரிமையுடையவர் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பாமக தலைவராக இருந்த அன்புமணியின் பதவிக்காலம் மே 28-ஆம் தேதியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, கட்சி விதிகளின் படி, ராமதாஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அன்புமணி தரப்பில் இருந்து எதிர்வினை வருமா என்பதே தற்போது அரசியல் வட்டாரங்களின் கவனத்துக்குரியதாக உள்ளது.