வன்முறைக்குப் பிறகு முதன்முறையாக மணிப்பூர் செல்லும் பிரதமர் மோடி – காங்கிரஸ் கடும் விமர்சனம்

வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மணிப்பூர் செல்லும் அவரது பயணம் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

மூன்று மாநிலங்களுக்கு பிரதமரின் பயணம்

பிரதமர் மோடி மூன்று நாட்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் மிசோரம் செல்லும் அவர், ₹9,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, சைராங் – டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சைராங் – கவுஹாத்தி எக்ஸ்பிரஸ், சைராங் – கொல்கத்தா எக்ஸ்பிரஸ் என மூன்று புதிய ரயில் சேவைகளை துவக்குகிறார். அதோடு புதிய சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் மணிப்பூருக்கு செல்லும் பிரதமர், அங்கு ₹7,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், தலைநகர் இம்பாலில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு பல்துறை அங்காடியையும் திறந்து வைக்கிறார். குக்கி–மெய்தி இனக்குழுக்களிடையே வெடித்த வன்முறைக்குப் பிறகு நடைபெறும் இந்த விஜயம், அங்குள்ள மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் பயணத்தை முடித்த பிரதமர், அசாம் மாநிலத்திற்கு சென்று இரண்டு நாள் தங்குகிறார். அங்கு ₹18,530 கோடி மதிப்பிலான சாலைகள், பாலங்கள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட திட்டங்களை துவக்குகிறார். தொடர்ந்து, மேற்குவங்கத்தில் நடைபெறும் ராணுவத் தளபதிகள் மாநாட்டிலும் பங்கேற்கிறார். அங்கிருந்து பீகாருக்குச் செல்லும் அவர், தேசிய மக்கானா வாரியம், புர்னியா விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்களை திறந்து வைப்பதோடு, மொத்தம் ₹36,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு

மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்லும் பிரதமரை வரவேற்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆனால், இந்தப் பயணம் வெறும் சம்பிரதாய நடவடிக்கையாகவே முடிவடையும் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், “மோடியின் மணிப்பூர் விஜயம் அங்குள்ள மக்களுக்கு அமைதியையோ நல்லிணக்கத்தையோ தராது. சில மணி நேர விஜயம் ஒரு கேலிக்கூத்தாகவே முடியும்” என்று குற்றம்சாட்டினார்.
அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், “பிரதமர் 2 ஆண்டுகளுக்கு முன்பே மணிப்பூருக்குச் செல்ல வேண்டியது. இப்போது மிகுந்த தாமதமாக அங்கு செல்வது பயனற்றது” என்று கண்டித்தார்.

வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் பலி

2023ஆம் ஆண்டு மெய்தி சமூகத்தினர் பழங்குடியின அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் பேரணி நடத்தினர். அப்போது வெடித்த கலவரம் வன்முறையாக மாறியது. வீடுகள் எரிக்கப்பட்டன, நூற்றுக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சமடைந்தனர். பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியான வன்முறையை சமாளிக்க முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, முதல்வர் பைரன் சிங் பதவி விலகினார். பின்னர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version