இனி ஏடிஎம், யுபிஐ மூலமும் பி.எஃப். பணம் எடுக்கும் வசதி – மத்திய அரசு புதிய திட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை எடுக்கும் முறையை எளிதாக்கும் வகையில் மத்திய அரசு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

தற்போது திருமணம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக பி.எஃப். கணக்கிலிருந்து முன்பணம் பெறும் வசதி உள்ள நிலையில், அதை மேலும் சுலபமாக்கும் நோக்கில் “EPFO 3.0” என்ற புதிய திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை யுபிஐ மூலமாக நேரடியாக பணியாளர்களின் வங்கி கணக்கிற்கு உடனடியாக அனுப்பும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதனால், விடுமுறை நாட்கள் அல்லது 2 நாட்கள் காத்திருக்க வேண்டிய சிக்கல்கள் அனைத்தும் நீங்கி, பயனாளர்கள் அவசரத் தேவைக்கு உடனடியாக பணத்தைப் பெற முடியும்.

மேலும், ஏடிஎம் வழியாகவும் பி.எஃப். தொகையை எடுக்கும் வகையில் மாற்றம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதமே இந்த திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதால் செயல்பாடு சிறிது தாமதமாகி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மொத்தத்தில், இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டால், பி.எஃப். பணத்தை எடுப்பது வங்கி நடைமுறைகளை விட எளிமையுடன், உடனடி வசதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version