‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு எதிராக மனு – ரூ.10 லட்சம் அபராதம் செலுத்திய சி.வி. சண்முகம்

சென்னை: தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை, ரூ.1 லட்சம் அபராதத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் இனியன் தாக்கல் செய்த மனுவில், அரசு முத்திரையுடன் வெளியிடப்பட்டுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ விளம்பரங்களில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என கூறப்பட்டது.

அரசின் திட்டத்தை, தனி மனித சாதனையாக காட்டுவது தவறு என்றும், அரசியல் நோக்கத்துடன் கோடிக்கணக்கான ரூபாய் அரசு நிதி செலவிடப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், தன்னார்வலர்கள் என்ற பெயரில் திமுகவினர் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு தேர்தல் பிரச்சாரம் நடத்தப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், விளம்பரங்களில் கருணாநிதி புகைப்படம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்க கோரப்பட்டது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வில், தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் மற்றும் பி. வில்சன் ஆகியோர், இதே கோரிக்கையுடன் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதத்துடன் முன்பே தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், இனியன் தாக்கல் செய்த மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.10 லட்சம் அபராதத் தொகையை சி.வி. சண்முகம் ஏற்கனவே செலுத்தியுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version