மக்கள் குறைகள் விரைவில் தீர்க்கப்படும் –  திண்டுக்கல் ஆட்சியர் உறுதி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாகப் பெற்று, அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குவது குறைதீர்க்கும் நாள் கூட்டங்களின் நோக்கமாகும். இன்றைய கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 228 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் நிலம் தொடர்பான பிரச்சினைகள், வீட்டு வசதி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித் திட்டங்கள், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல துறைகளில் பதிவு செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், ஒவ்வொரு மனுவையும் விரிவாக ஆய்வு செய்து, “பொதுமக்களின் பிரச்சினைகள் தாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், ஒவ்வொரு மனுவையும் அக்கறையுடன் கையாள்ந்து, தகுதியானவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியின் போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ. 8,350/- மதிப்பிலான சக்கர நாற்காலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. இதனைப் பெற்ற பயனாளர் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அரசு வழங்கும் நலத்திட்டங்கள் தன்னுடைய வாழ்க்கையில் நம்பிக்கையை ஊட்டியதாகக் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா. ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி கீர்த்தனா, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு. க. செந்தில்வேல், நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு. மகாலிங்கம்,
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. அன்பழகன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.  “மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவது, அரசின் பொறுப்பு.
ஒவ்வொரு குறையும் நியாயமான முறையில் தீர்க்கப்படும் வரை தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்,” என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன் உறுதியளித்தார்.

Exit mobile version