மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல, உரிமை : முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மாற்றுத்திறனாளிகளை கருணைக்குரியவர்களாக அல்ல, உரிமையுடைய குடிமக்களாகப் பார்க்க வேண்டும் என்ற அணுகுமுறையுடன்தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் அவர் உரையாற்றிய போது, “இது வெறும் விழா நாள் அல்ல; சமத்துவம் மற்றும் சம வாய்ப்பை உணர்த்தும் நாள். மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் அனைத்து பொறுப்புகளிலும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் திராவிட மாடல் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது” என கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் பங்கெடுப்பதை வலியுறுத்திய அவர், “தமிழகத்தில் இதுவரை 3,631 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வாகியுள்ளனர். கூடுதலாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு உள்ளாட்சி பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். இது திராவிட மாடலின் செயல்பாட்டைக் காட்டுகிறது” என்றார்.

அரசின் முயற்சிகள் பற்றி பேசும்போது, “உலக நாடுகளுக்கான வழிகாட்டி ‘உட்சேர்க்கை வளர்ச்சி’ என ஐ.நா. அறிவித்துள்ள நிலையில், அந்த திசையிலேயே தமிழக அரசு முன்னேறுகிறது. சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவை நமது உயிர்மூச்சு” என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்த நாளை நினைவு கூர்ந்த அவர், “அன்று மாற்றுத்திறனாளி நண்பர்கள் என்னைத் தழுவிக் கொண்ட அந்த தருணம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும்” என உணர்ச்சி பொங்கப் பேசினார்.

மேலும், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதையும் அவர் கூறினார்.
“அரசுத் துறைகளில் உகந்த பணியிடங்களை அடையாளம் கண்டு, 4% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளோம். தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அரசுடன் இணைந்து புதிய வரலாற்றை எழுதப் போகிறார்கள்” என முதல்வர் தெரிவித்தார்.

Exit mobile version