கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரத்தில் சாலை விரிவாக்கப் பணிகளால் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து, கடந்த 16 நாட்களாக 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து நாளை (டிசம்பர் 29) மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
அவிநாசியில் தொடங்கி அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை நடைபெறும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியின் போது, பூமிக்கடியில் சென்ற குடிநீர் வடிகால் வாரியத்தின் பிரதான குழாய்கள் பல இடங்களில் பலத்த சேதமடைந்துள்ளன. இந்தப் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த மாதம் முன்னறிவிப்பு செய்யப்பட்டு 10 நாட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால், பணிகள் முடிந்து விநியோகம் சீராகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி முதல் பொகலூர், ஒட்டர்பாளையம், வடக்கலூர், குப்பனூர், காரே கவுண்டன்பாளையம், வடவள்ளி உள்ளிட்ட 6 ஊராட்சிகளுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான குக்கிராமங்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை.
இது குறித்து பொகலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் நடராஜன் மற்றும் கிராம மக்கள் கூறுகையில், “தண்ணீர் இன்றி மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அன்றாடத் தேவைகளுக்காக 8 கி.மீ. தொலைவில் உள்ள அன்னூர் பேரூராட்சிக்குச் சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் முறையிட்டும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழாய் சீரமைப்புப் பணிகள் மிகக் குறைந்த ஊழியர்களைக் கொண்டு மெத்தனமாக நடைபெற்று வருவதே இந்த தாமதத்திற்கு முக்கியக் காரணம்,” என வேதனையுடன் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்தும், உடனடியாக தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தியும் நாளை (29-ஆம் தேதி) பொகலூர் பகுதியில் மகாத்மா காந்தி சாலையில் மறியல் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே சாலைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல் நிலவும் சூழலில், மக்களின் இந்த போராட்ட அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்திடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை முடித்து, மக்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
