மனையிட அனுமதிக்கு ரூ. 1 லட்சம் கேட்ட பி.டி.ஓ. உதவியாளர் சிக்கினார்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மனையிட அனுமதி வழங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சிகள்) லஞ்ச ஒழிப்புத்துறையினர்  கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.  பரமக்குடி தாலுகா எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் உள்ள ஒரு நிலத்திற்கு, ராமநாதபுரம் நகர ஊரமைப்புத் துறையில் (DTCP) ஒருவர் மனையிட அனுமதி பெற்றிருந்தார். இதற்காக, அரசுக்கு உள்ளாட்சி மனை வரன்முறைப்படுத்தல் கட்டணமாக ரூ. 3,47,800-ஐ அவர் கடந்த மாதம் செலுத்தியிருந்தார்.

அரசு கட்டணத்தைச் செலுத்திய பின்னர், உள்ளாட்சி அமைப்பின் அனுமதியைப் பெறுவதற்காக கடந்த வாரம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.) அன்புக்கண்ணனை மனுதாரர் சந்தித்தார். அவர், இது தொடர்பாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் (வயது 49) என்பவரைத் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். இளங்கோவனைச் சந்தித்து விவரம் கேட்டபோது, ஒரு வாரம் கழித்து வருமாறு கூறியுள்ளார். மீண்டும் கடந்த வாரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) இளங்கோவனைச் சந்தித்து விவரம் கேட்டபோது, அதிர்ச்சி தரும் கோரிக்கையை அவர் வைத்துள்ளார்.

“உங்க ஃபைலை ரெடி செய்ய, எனக்கும், அலுவலகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் (ரூ. 1,00,000) லஞ்சம் தர வேண்டும்” என்று அவர் நேரடியாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர், உடனடியாக ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அளித்த அறிவுறுத்தலின் பேரில், மனுதாரர் நேற்று (டிசம்பர் 11) காலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனைச் சந்தித்துள்ளார். அப்போது இளங்கோவன், அவர் ஏற்கனவே கேட்ட ஒரு லட்சம் ரூபாயில், இன்று (டிசம்பர் 11) ரூ. 50,000-ஐயும், மீதித் தொகையான ரூ. 50,000-ஐ வரும் வெள்ளிக்கிழமை கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூ. 50,000 ரொக்கத்தை மனுதாரர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனிடம் கொடுக்கும்போது, அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து இளங்கோவனைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். மனையிட அனுமதி போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு அரசு கட்டணம் செலுத்திய பிறகும் லஞ்சம் கேட்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version