பிரதமர் மோடி, தாயார் தொடர்பான ஏஐ வீடியோக்களை நீக்க உத்தரவு : பாட்னா ஐகோர்ட் அதிரடி

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் தாயாரை குறித்த ஏஐ வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்குமாறு, காங்கிரஸ் கட்சிக்கு பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பீஹாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில், பிரதமர் மோடி போன்ற தோற்றத்தில் ஒருவர் பேசுவது, பின்னர் கனவில் அவரது தாயார் உருவத்தில் தோன்றும் ஒருவர் பீஹார் அரசியல் குறித்து விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும் கடும் கண்டனங்களை கிளப்பியது. ஏராளமான விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாஜக தேர்தல் பிரிவைச் சேர்ந்த சங்கேத் குப்தா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பாட்னா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி (பொறுப்பு) பஜான்த்ரி, சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்த அந்த வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவிட்டார்.

பீஹாரில் தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த வழக்கு மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த உத்தரவு, அங்குள்ள அரசியல் சூழ்நிலைக்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version