ரஷ்யாவின் தூரக்கிழக்குப் பகுதியான அமுர் மாகாணத்தில், 46 பேருடன் பயணம் செய்த ஏ.என்.-24 ரக பயணிகள் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட மீட்பு படையினர், விமானம் தரையிலே விழுந்து நொறுங்கியதை உறுதி செய்துள்ளனர்.
அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானத்தில் 40 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர். இதில் 2 குழந்தைகளும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிண்டா விமான நிலையத்தை அணுகும் போது விமானம் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அது விழுந்துவிட்டதாக சந்தேகம் எழ, தீவிர தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டது.
விமானத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதில் பயணித்தவர்கள் நிலைமை குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன