பரமக்குடியைச் சேர்ந்த செந்தில்வேல் என்ற நபரின் மரணம் தொடர்பான வழக்கில், அவரது வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர் மாரீஸ் குமார் ஆகியோர் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரியகிளாட் அமர்வு முன் மனு தாக்கல் செய்தனர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்த பெண் ஒருவர், தங்கள் காரில் இருந்த நகைகள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்த விசாரணையில், அந்தக் கோயிலில் தற்காலிக ஊழியராக இருந்த அஜித் என்ற இளைஞரை காவல்துறையினர் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக அவர் உயிரிழந்துள்ளார். மேலும், அவரது சகோதரரையும் விசாரணைக்காக அழைத்து தாக்கியுள்ளனர்.
அஜித் உயிரிழந்ததற்கு காவல்துறையினரது தாக்குதலே காரணம் என தெரிவித்த வக்கீல்கள், இது போன்ற சட்டவிரோத காவல் மரணங்களை ஏற்க முடியாது எனக் கூறினர். ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து (suo motu) விசாரணை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவர் என்ன தீவிரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினால் தற்காப்புக்காக தாக்குவதை நியாயமாகக் கொள்ளலாம். ஆனால், ஒரு சாதாரண சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்குவது ஏன்?” எனக் கடுமையாக கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முறையான மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தி, பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.