தென்கொரியாவின் குவாங்ஜுவில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பெண்களுக்கான காம்பவுன்ட் ஒற்றையர் பிரிவு இறுதியில், உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் துருக்கி வீராங்கனை ஒஸ்நுர் குரே கிர்டியுடன் மோதிய ஷீத்தல், 146-143 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 18 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது உலக அளவில் முதல்முறையாகும்.
இது ஷீத்தலின் மூன்றாவது பதக்கமாகும். கலப்பு இரட்டையர் பிரிவில் டோமன் குமாருடன் இணைந்து வெண்கலம், பெண்கள் இரட்டையர் பிரிவில் சரிதாவுடன் இணைந்து வெள்ளி வென்றிருந்தார்.
ஆண்கள் காம்பவுன்ட் பிரிவில் இந்திய வீரர் டோமன் குமார் தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் அவரின் எதிராளியான ராகேஷ் குமார் வில்லில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக போட்டியில் இருந்து விலக வேண்டியிருந்தது. இதன் மூலம் ராகேஷ் வெள்ளி பெற்றார்.
ஒரே நாளில் இந்தியா 5 பதக்கங்களை கைப்பற்றியிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக கருதப்படுகிறது. ஷீத்தல் தேவி மற்றும் டோமன் குமார் தங்கம் வென்றிருப்பது விளையாட்டு உலகில் பாராட்டுக்குரிய நிகழ்வாகியுள்ளது.