திண்டுக்கல்லில் அண்மையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசிய போது, “முத்துராமலிங்க தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும். மேலும் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்” என்று உறுதியளித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு, தேவேந்திர இனத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் இந்த முடிவை கண்டித்து வருகின்றன.
இதனிடையே, வரும் செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் நடைபெறவுள்ள தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தில், “அ.தி.மு.க. தரப்பில் யாரும் அஞ்சலி செலுத்தக்கூடாது” என தேவேந்திர பண்பாட்டுக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலைமை, ஏற்கனவே பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் வெளியேறிய பா.ஜ., – அ.தி.மு.க. கூட்டணிக்கு தென் மாவட்டங்களில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, ஜான்பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர், பழனிசாமியின் பேச்சால் அதிருப்தியடைந்த நிலையில், விஜய் தலைமையில் உருவாகவுள்ள கூட்டணியில் இணைந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளலாமா என்ற சாத்தியம் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.