பழனி ஐகோர்ட் பத்திரகாளியம்மன் கோவில் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புகழ்பெற்ற ஐகோர்ட் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றன. தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 473 காளைகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. தகுதியான காளைகளைத் தேர்வு செய்ததில், மொத்தம் 466 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்குவதற்காக, மருத்துவப் பரிசோதனைகள் முடிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வண்ணமயமான சீருடைகளுடன் களம் இறங்கினர். பழனி வருவாய் கோட்டாட்சியர் (RDO) கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, வட்டாட்சியர் பிரசன்னா, நெய்க்காரப்பட்டி பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் காளியப்பன் மற்றும் செயல் அலுவலர் பாண்டீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

தமிழகத்தின் பாரம்பரியம் மாறாமல் நடைபெற்ற இந்தப் போட்டியைப் பழனி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து சீறி வந்த காளைகளின் திமில்களைப் பிடித்து வீரர்கள் தீரத்துடன் போராடிய காட்சி அங்கிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்தப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற வீரர்களில் 14 பேர் லேசான காயமடைந்தனர்; அவர்களுக்குத் தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். களத்தில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் மாஸாக ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டுப் போட்டிக்காகப் பழனி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பார்வையாளர்கள் மற்றும் காளைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. விழாவில் திமுக நகரச் செயலாளர் வேலுமணி, நெய்க்காரப்பட்டி பேரூராட்சி செயலாளர் அபுதாகிர், ஒன்றிய செயலாளர்கள் சௌந்தர பாண்டியன், சாமிநாதன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர். பழனி ஐகோர்ட் பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தின் சிறப்பான ஏற்பாட்டால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி மிகுந்த உற்சாகத்துடனும், வீர உணர்வுடனும் அரங்கேறியது.

Exit mobile version