ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) அறிவித்துள்ளது.
இந்த கொடூரமான தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணையின் போதே, லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய இருவர் – பஹல்காமின் பட்கோலே பகுதியைச் சேர்ந்த பர்வேஸ் அஹமது மற்றும் ஹில்பார்க் பகுதியைச் சேர்ந்த பஷீர் அஹமது ஜோதார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள், 5 நாட்கள் போலீஸ் காவலிலும் வைத்துள்ளனர்.
இந்த இருவரும் விசாரணையின் போது, தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளின் அடையாளங்களை வெளியிட்டுள்ளனர். அவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள், சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசாரின் ஓவிய அடையாளங்கள் ஆகியவை தற்போது புலனாய்வில் முக்கிய ஆதாரங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது பயங்கரவாதிகளின் முழுமையான அடையாளங்கள், சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.















