மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனதால், கண்மாய் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் நெல் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடர் புளியங்குளம், வடபழஞ்சி, கரடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட மானாவாரி கண்மாய்கள் தற்போது சொட்டுத் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. கடந்த ஆண்டு பெய்த ஓரளவிலான மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் விவசாயம் ஓரளவு கைகொடுத்தது. ஆனால், இந்த ஆண்டு நிலவும் கடும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதனால் ஆழ்குழாய் கிணறு வைத்துள்ள ஒருசில விவசாயிகளைத் தவிர, மற்ற பெரும்பான்மையான மானாவாரி விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் நிலங்களைத் தரிசாகப் போட்டுள்ளனர்.
நடப்புச் சம்பா பருவத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் விதை நெல் வாங்கி நாற்றாங்கால் அமைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏக்கருக்கு விதை நெல், உரம் மற்றும் கூலி எனச் சுமார் 15,000 ரூபாய் வரை செலவு செய்து வளர்த்த நாற்றுக்கள், நடவு செய்யப் போதிய தண்ணீர் இல்லாததால் வயல்களிலேயே முற்றி வீணாகிப் போய்விட்டன. வழக்கமாக 25 முதல் 30 நாட்களுக்குள் நடவு செய்யப்பட வேண்டிய நாற்றுக்கள், தற்போது 45 நாட்களைக் கடந்தும் தண்ணீரின்றி காய்ந்து வருவதால், அவற்றை இனி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். “முதலீடு செய்த பணமும் போச்சு, உழைப்பும் வீணாப்போச்சு” எனச் சிவராமன், பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர்.
கிணற்றுப் பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயிகளும் கூட, கடந்த ஆண்டை விட மிகக் குறைந்த அளவிலேயே நடவு செய்துள்ளனர். போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க, பாதிக்கப்பட்ட ஏக்கர் கணக்கிலான நிலங்களுக்கு அரசு உரிய இழப்பீடு மற்றும் மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், நிரந்தரத் தீர்வாகத் திருப்பரங்குன்றம் மானாவாரிப் பகுதிகளுக்கும் வைகை ஆற்றிலிருந்து உபரித் தண்ணீரைத் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். அவ்வாறு செய்தால்தான் இப்பகுதி விவசாயம் அழியாமல் பாதுகாக்கப்படும் என்றும், விவசாயிகள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளைத் தவிர்த்து வருமானம் ஈட்ட முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
