பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள எம்.கரிசல்குளம் கிராமத்தில், போதிய நீரின்றி நெற்பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், அவற்றை எப்பாடுபட்டாவது காப்பாற்ற விவசாயிகள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். பருவமழையை நம்பி, உள்ளூர் கண்மாயில் சேகரமான சொற்ப அளவிலான தண்ணீரைக் கொண்டு உற்சாகத்துடன் நடவுப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால், தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து பால் பிடித்து, தானியங்களாக உருமாறும் மிக முக்கியமான தருணத்தில், கண்மாய் முற்றிலும் வறண்டு போனது விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், பயிர்களைக் காப்பாற்ற வேறு வழியின்றி விவசாயிகள் அருகில் உள்ள சிறிய கால்வாய்கள் மற்றும் குட்டைகளில் தேங்கியுள்ள கழிவுநீரையும், குட்டை நீரையும் மோட்டார் பம்புகள் மூலம் பல கிலோமீட்டர் தொலைவிற்கு இழுத்து வந்து பாய்ச்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். போதிய நீர் கிடைக்காததால் பயிர்கள் மஞ்சளாக மாறி கருகத் தொடங்கியுள்ளன. பல ஆயிரக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து, அறுவடைக்குத் தயாராகும் நிலையில் உள்ள பயிர்கள் கண்முன்னே அழிவதைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் மல்கக் காத்திருக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஞானசேகர் வேதனையுடன் கூறுகையில், “எங்கள் வாழ்வாதாரமே இந்த 200 ஏக்கர் நெற்பயிர்களில் தான் உள்ளது. கண்மாய் வறண்டதால், எங்கோ தேங்கிக் கிடக்கும் நீரை மோட்டார் மூலம் கொண்டு வந்து பயிரை உயிர்ப்புடன் வைக்கப் போராடி வருகிறோம். ஆனால், எங்களைச் சுற்றியுள்ள மேலப்பசலை, கீழப்பசலை மற்றும் வன்னிக்குடி ஆகிய கிராமக் கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து முறையாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் பயிர்கள் செழிப்பாக உள்ளன. ஆனால், மிக அருகில் உள்ள எம்.கரிசல்குளம் கண்மாய்க்கு மட்டும் வைகை நீர் வந்து சேராதது ஏன் என்று தெரியவில்லை. அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி, வைகை ஆற்றில் இருந்து எங்கள் கண்மாய்க்குத் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே, நாங்கள் செய்த செலவை மீட்டெடுத்து முழுமையாக அறுவடை செய்ய முடியும்,” எனத் தெரிவித்தார்.

அறுவடைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வைகை ஆற்றின் உபரி நீரைக் கால்வாய்கள் வழியாக எம்.கரிசல்குளம் கண்மாய்க்குத் திருப்பி விட மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது. தவறும்பட்சத்தில், 200 ஏக்கர் பயிர்களும் வீணாகி, விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகும் அபாயம் நிலவுகிறது.

Exit mobile version