மதுரை:
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக, மத்திய அரசு தெளிவான கொள்கை வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில், மனு ஸ்மிருதி மற்றும் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் ஆகியவற்றை மேற்கோள் காட்டியிருப்பது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், அந்நாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்படும் சூழ்நிலைகளில், உரிய இழப்பீடு பெற சட்ட உதவி வழங்கும் வகையில் மத்திய அரசு ஒரு தனிப்பட்ட கொள்கையை உருவாக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவில், “ஒரு அரசனின் உயரிய கடமை தனது குடிமக்களை பாதுகாப்பதே” என மனு ஸ்மிருதி வரையறுத்துள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கௌடில்யரின் கருத்துகளை மேற்கோள் காட்டி, “குடிமக்களின் நலனிலேயே ஆட்சியாளரின் நலன் அடங்கியுள்ளது. அவர்களின் மகிழ்ச்சியே அரசின் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என விளக்கப்பட்டுள்ளது.
மேலும், “மன்னன்” என்ற சொல்லை இன்றைய காலகட்டத்தில் “அரசாங்கம்” என்ற சொல்லாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். வரிகளை வசூலிக்கும் அரசு, அதற்குப் பதிலாக குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே தர்மத்தின் அடிப்படை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சமீப காலமாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 120 எம்.பிக்கள், கடந்த 9ஆம் தேதி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து, நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மான நோட்டீஸை வழங்கியிருந்தனர்.
இந்த பின்னணியில், தற்போது வெளியான இந்த தீர்ப்பும் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
















