“மக்கள் சந்திப்பில் ஒழுங்கு, பாதுகாப்பு முக்கியம்” – தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தல்

மக்கள் சந்திப்பு பயணங்களை முன்னிட்டு, தனது கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் கடைபிடிக்க வேண்டிய 12 வழிகாட்டு நெறிமுறைகளை தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில், தொண்டர்கள் தன்னை வாகனங்களில் பின்தொடரக்கூடாது என்றும், மரம் அல்லது உயரமான இடங்களில் ஏறக்கூடாது என்றும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் நேரில் வருவதற்குப் பதிலாக, வீட்டிலிருந்தபடியே நிகழ்ச்சியை நேரலையில் காணுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் சந்திப்பு நடைபெறும் இடங்களில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும், காவல்துறை விதிமுறைகளை மீறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தேசிய நெடுஞ்சாலைகளில் பிளக்ஸ், பேனர், கொடி கம்பங்கள் போன்றவை அனுமதி இல்லாமல் வைக்கப்படக் கூடாது என்றும், பட்டாசு வெடிப்பது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டுமென்றும் விஜய் தனது வழிகாட்டுதலில் கூறியுள்ளார்.

மொத்தத்தில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் பாதுகாப்பாகவும், ஒழுங்காகவும் நடைபெற வேண்டும் என்பதே விஜயின் அறிவுறுத்தல்களின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

Exit mobile version