மெகா அரசியல் திட்டத்துக்கு தயாராகும் ஓ.பி.எஸ். அணி ?

தமிழக அரசியல் சூழலில் முக்கிய திருப்பமாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, ஜூலை 31ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தையடுத்து வந்தது. அந்த சந்திப்பில், ஓ.பன்னீர்செல்வம் தனது முக்கிய ஆதரவாளர்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவரது அணியினருள் ஒருவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், “இனி முதல் எங்கள் குழு NDA கூட்டணியில் இல்லை” எனத் தெரிவித்தார்.

அதேவேளை, எந்த கட்சியுடனும் தற்போது கூட்டணியில் இல்லை என்றும், எதிர்கால கூட்டணிகள் குறித்து சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஓ.பி.எஸ். தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஓ.பி.எஸ். அணியின் மாநாடு அடுத்த மாதம் 4ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால், ஓ.பி.எஸ். புது அரசியல் நடவடிக்கைகளை திட்டமிட்டுவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version