அதிமுக உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இதுவரை அங்கம் வகித்து வந்த ஓபிஎஸ், தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக–அதிமுக கூட்டணி மீண்டும் உருவானதை எதிர்த்து கூட்டணியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
மேலும், பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்தபோது நேரம் கேட்டும் சந்திப்பு கிடைக்காதது ஓபிஎஸின் அதிருப்தியை அதிகரித்ததாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் நடத்திய சமரச முயற்சிகளும் பயனின்றி முடிந்தது.
இந்த சூழலில், கடந்த 24 ஆம் தேதி வேப்பேரியில் நடைபெற்ற அதிமுக உரிமை மீட்பு குழு கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், டிசம்பர் 15ஆம் தேதி முக்கிய தீர்மானம் அறிவிக்கப்படும் என்று கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாகவே, பாஜகவின் அழைப்பின் பேரில் தனது மகனுடன் டெல்லி சென்ற ஓபிஎஸ், அமித் ஷாவை நேரில் சந்தித்து தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆலோசித்துள்ளார். டெல்லியில் தங்கியுள்ள அவர், பாஜக மற்றும் தேசிய அளவிலான பிற தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புகளின் பின்னர், ஓபிஎஸ் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிப்பார் என்பது அரசியல் வட்டாரங்களில் நிலவும் எதிர்பார்ப்பு.
