தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி!.. மயங்கி விழுந்த பெண் எம்.பி.. ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது!

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல்களில் வாக்குத்திருட்டு நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.

ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது..
சுமார் 25 கட்சிகளை சேர்ந்த 300 மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி தேர்தல் ஆணையத்திற்கு சென்ற அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

ஊர்வலத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை எனக்கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுக்கப்பட்டனர். அப்போது சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி உள்ளிட்ட சிலர் தடுப்புகளை தாண்டி குதித்து முன்னேறிச் செல்ல முற்பட்டனர்.

அப்போது ஒரு பெண் எம்.பி.மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் ராகுல் காந்தியின் காரில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இதைத்தொடர்ந்து ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட சுமார் 30 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இது தனி மனிதனின் வாக்குரிமையை காப்பதற்கான போராட்டம் எனக் குறிப்பிட்டார்.

Exit mobile version