காஷ்மீரில் ‘ஆப்பரேஷன் அகல்’ : துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று காலை நடந்த என்கவுன்டரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் வழங்கியது. இதனையடுத்து, இந்திய இராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து ‘ஆப்பரேஷன் அகல்’ எனும் பெயரில் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.

தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகள் தாங்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து பாதுகாப்புப் படையினர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்குப் பதிலளித்த பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையிலும், அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கையின் போது ஏற்பட்ட சண்டை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் குல்காம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Exit mobile version