ஸ்டாலின் குடும்பம் மட்டுமே வளர்ச்சி: தமிழகம் கடன் சுமையில் தவிப்பதாக டாக்டர் பா.சரவணன் அதிரடி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் திமுக அரசின் நிர்வாக சீர்கேடு மற்றும் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் சாமானிய மக்கள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொரு வீடும் வளர்ச்சியடைந்துள்ளதாகக் கூறுவது, பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டதாக நினைப்பதற்குச் சமம் என்று குறிப்பிட்ட அவர், எடப்பாடியார் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட வலிமையான கட்டமைப்பை வைத்துக்கொண்டுதான் தற்போதைய அரசு காலத்தை ஓட்டி வருகிறது என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக, 2020 கொரோனா பெருந்தொற்று காலத்திலேயே தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, மத்திய அரசு மற்றும் சர்வதேசப் பொருளாதார வல்லுநர்களின் பாராட்டைப் பெற்ற எடப்பாடியாரின் சாதனைகளை ஸ்டாலின் வசதியாக மறந்துவிட்டார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசு முழங்கி வரும் ‘ஒரு டிரில்லியன் டாலர்’ பொருளாதார இலக்கு என்பது எட்டாக்கனி என்று விமர்சித்த டாக்டர் சரவணன், இந்த இலக்கை அடைய வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 18 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் திமுக ஆட்சியில் இது 7.89 முதல் 11.19 சதவீதம் வரை ஏற்ற இறக்கத்துடனேயே உள்ளது என்றார். மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இருந்தாலும், இங்கு நிலவும் பணவீக்கம் மற்றும் கடன் வீக்கம் காரணமாக இலக்கை எட்டுவது சாத்தியமற்றது என வல்லுநர்கள் எச்சரிப்பதை அவர் கோடிட்டுக் காட்டினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ள நிலையில், தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதாகக் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என்றும், உண்மையில் இன்று தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 4.66 லட்சம் ரூபாய் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், 12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படும் கணக்குகள் காகித அளவில் மட்டுமே இருப்பதாகவும், களத்தில் ஒரு லட்சம் கோடி அளவிற்குக் கூடப் புதிய தொழில் நிறுவனங்கள் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எடப்பாடியார் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக வேலைக்குச் செல்லும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தமிழகம், தற்போது கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களுக்குப் பின்னால் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது வேதனைக்குரியது என்றார். இந்த ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல் செய்யப்பட்டு ஸ்டாலின் குடும்பம் மட்டுமே பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளதாகவும், 30 சதவீத விலைவாசி உயர்வு, கடுமையான மின்கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் பொருளாதாரப் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை முதலமைச்சர் ஒப்புக்கொள்ள வேண்டும் எனத் தனது பேட்டியில் டாக்டர் பா.சரவணன் ஆவேசமாகத் தெரிவித்தார்.

Exit mobile version