திண்டுக்கல் : தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 25ஆம் ஆண்டு மாநில மாநாடு திண்டுக்கல்லில் உள்ள தோமையார்புரம் புறவழிச்சாலையில் நேற்று நடைபெற்றது.
மாநாட்டில் கட்சித் தலைவர் ஜான்பாண்டியன், பொதுச்செயலாளர் பிரிஸில்லா பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரும் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசுகையில் ஜான்பாண்டியன்,
“நாங்கள் பட்டியலினத்தில் இருந்து வெளியேற விரும்புகிறோம். இது ஒருநாள் நிச்சயம் கிடைக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அது சாத்தியமாகும் என நம்புகிறேன். மேலும், பிரதமர் நரேந்திர மோடியால்தான் இதை நமக்குத் தர முடியும். வேறு எந்த பிரதமராலும் அது சாத்தியமில்லை” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர், “12 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் ஈடுபட்டு வருகிறேன். தேர்தல்களில் சதிகள் நடந்தபோது, நயினார் நாகேந்திரன், எல். முருகன், அண்ணாமலை ஆகியோரின் வலியுறுத்தலால் எனக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. சமத்துவமே தேவை, சாதி அல்ல. வேளாண் குடிகளாக வீரர்களாக வாழ்ந்த நாங்கள் குறுகிய வட்டத்திற்குள் சுருங்கக் கூடாது” எனவும் வலியுறுத்தினார்.
மாநாட்டில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், “2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் கூட்டணி ஆட்சி அமையும். அப்போது இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் செயல்படுத்த உற்ற துணையாக இருப்போம். அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி தான்” என்றார்.
ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “பாஜக–அதிமுக கூட்டணிக்கு ஏற்கனவே 39 சதவீத வாக்குகள் உறுதி. இந்த கூட்டணியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என அமித்ஷா தெரிவித்துள்ளார். பல கட்சிகள் இன்னும் இணைவதால் எடப்பாடி பழனிசாமி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார்” என கூறினார்.
இரு அமைச்சர்களின் “கூட்டணி ஆட்சி – தனிப்பெரும்பான்மை ஆட்சி” குறித்த மாறுபட்ட கருத்துகள் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கமாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “நெல்லையில் அமித்ஷா கூறியது போல, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். நல்லாட்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் அவசியம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.