சென்னை :
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்னணியில் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றொரு கண் என அவர் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுவின் 3-வது கூட்டம் இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, மாநிலத்தின் காலநிலை மாற்றத் திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர், சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். இதை கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும், அதனை ஊக்குவிக்கும் வகையில் 120 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பேருந்துகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மேலும் 600 மின்சார பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலும், காற்று மாசுபாடும் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் ரூ.24,679 கோடி நிதி கோரிய நிலையில், அதில் 17 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் குற்றம்சாட்டினார். ரூ.4,136 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எத்தனையோ இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வெற்றிகரமாக சமாளித்துள்ளது என்றும், அதேபோல் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் சவால்களையும் உறுதியுடன் எதிர்கொண்டு தமிழ்நாடு வெற்றி பெறும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
















