வெறும் 12 சர்வதேச போட்டிகள் மட்டுமே… உலகக்கோப்பை நாயகன் பெர்னார்ட் ஜூலியன் மறைவு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், 1975 உலகக்கோப்பை வெற்றிக்குக் காரணமான முக்கிய வீரர்களில் ஒருவருமான பெர்னார்ட் ஜூலியன் காலமானார். அவருக்கு 75 வயதாகிறது.

1970களில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் உலகத்தை ஆட்டிப்படைத்த போது, தனது பந்துவீச்சும் பேட்டிஙும் இணைந்து அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்தார் ஜூலியன். இடதுகை வேகப்பந்துவீச்சாளராகவும் திறமையான மிடில்ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் அவர் அறியப்பட்டார்.

முதல்தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டுகளில் சேர்த்து 7000 ரன்களுக்கு அருகில் குவித்ததுடன், 483 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். பந்துவீச்சில் துல்லியமும் பேட்டிங்கில் நம்பகத்தன்மையும் அவரின் அடையாளமாக இருந்தது.

1975 உலகக்கோப்பையின் நாயகன்

1975-ல் நடைபெற்ற முதல் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், ஜூலியன் வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்குத் தூணாக விளங்கினார்.
இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் வெறும் 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அவர், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் எடுத்து அணியை இறுதிக்கு அழைத்துச் சென்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அந்த தொடரில் மொத்தம் 10 விக்கெட்டுகளைப் பெற்று, அதிக விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளராக பெயர்பெற்றார்.

குறுகிய ஆனால் தாக்கம் மிக்க வாழ்க்கை

1973 முதல் 1977 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 24 டெஸ்ட் மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், பெர்னார்ட் ஜூலியன் தனது திறமையால் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நிலையான இடம் பெற்றார். தென்னாப்பிரிக்கா இனவெறி சர்ச்சை காரணமாக அவரின் சர்வதேச வாழ்க்கை குறுகியது.

இரங்கல் தெரிவிப்பு

அவரின் மறைவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு இரங்கல் தெரிவித்துள்ளது. அவரின் முன்னாள் கேப்டனான கிளைவ் லாயிட்,

“ஜூலியன் எப்போதும் 100 சதவீதத்திற்கும் மேலான உழைப்பைக் கொடுத்தவர். பந்துவீச்சிலும் பேட்டிஙிலும் நம்பிக்கையுடன் விளையாடிய ஒரு உண்மையான அணிவீரர்,” என்று நினைவுகூர்ந்துள்ளார்.

Exit mobile version