ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் சிறு வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வணிகர்களின் நலனைப் பாதுகாக்கத் தமிழக அரசு தனித்துறை மற்றும் சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். 5-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்: பழனி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 5-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் பழனியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜே.பி. சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாநில இணைச்செயலாளர் ‘கந்த விலாஸ்’ என். பாஸ்கரன், மாநில துணைத்தலைவர் ‘கண்பத் கிராண்ட்’ என். ஹரிஹரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தீர்மானங்களை விளக்கிப் பேசினார். இந்தக் கூட்டத்தில் பழனி நகரத்தின் முன்னேற்றம் மற்றும் வணிகர்களின் நலன் சார்ந்து முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:
பழனி – கொடைக்கானல் இடையே திட்டமிடப்பட்டுள்ள ரோப் கார் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பழனி – தாராபுரம் சாலையில் மேம்பாலப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். பழனியிலிருந்து சென்னைக்குக் கூடுதல் பகல் நேர இரயில்களை இயக்க வேண்டும். பழனி கோயில் அடிவாரம் பகுதியில் ஆயிரக்கணக்கான வணிகர்கள் உள்ளனர். எனவே, அவர்களின் நலன் காக்கப் பழனி கோயில் அறங்காவலர் குழுவில் வணிகர் சங்கப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும். வணிகத்தின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய விக்கிரமராஜா, “ஆன்லைன் வணிகத்தின் வருகையால் 35 சதவீத வியாபாரம் எங்களை விட்டுச் சென்றுவிட்டது. மேலும், மும்பையைச் சேர்ந்த பெரும் நிறுவனங்கள் தமிழகத்தில் கிளைகளைத் தொடங்கிச் சாமானிய வணிகர்களை அப்புறப்படுத்தி வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் கடை நடத்த அனுமதிக்கக் கூடாது. வணிகர்களின் சிக்கல்களைத் தீர்க்கத் தனித்துறை அமைப்பது அவசியமாகும். எதிர்வரும் தேர்தலில், எங்கள் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக ஏற்கும் கட்சிக்கே வணிகர்களின் வாக்குகள் நகர்த்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், மண்டலத் தலைவர் திண்டுக்கல் டி. கிருபாகரன், மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, மாநிலப் பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா மற்றும் பழனி நகர திமுக செயலாளர் வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், மாவட்ட கௌரவத் தலைவர் கண்ணுசாமி, செயலாளர் என். செந்தில்குமார், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் எம். மணிக்கண்ணன், நகர் மன்ற துணைத்தலைவர் கந்தசாமி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி. சம்பத் உள்ளிட்ட ஏராளமான வணிகப் பிரமுகர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் இதில் பங்கேற்றுத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
