மகாராஷ்டிர சட்டசபையில் ரம்மி விளையாடியதாகவேளாண் அமைச்சருக்கு குற்றச்சாட்டு !

மகாராஷ்டிர வேளாண் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான மாணிக்ராவ் கோகடே, சட்டசபை அமர்வின்போது தனது மொபைலில் ஆன்லைன் சீட்டாட்டம் (ரம்மி) விளையாடியதாக வீடியோ ஒன்று வைரலாகி, கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் ஆபாச வீடியோக்கள் பார்க்கும், ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் பெருமளவில் கண்டிக்கப்பட்ட நிலையில், கோகடே சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவத் தொடங்கியவுடன், எதிர்க்கட்சிகள் தீவிர கண்டனங்களைத் தெரிவித்தன. சரத் பவார் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரோஹித் பவார், “தினமும் எட்டுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். அவர்களது பிரச்சனைகளைக் கேட்கும் நேரமில்லை. ஆனால் வேளாண் அமைச்சர் ரம்மி விளையாடுவதில் ஈடுபடுகிறார்” என குற்றம்சாட்டினார்.

அதேபோல், உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத், “லத்தூர் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக மும்பைக்கே நடந்து செல்கின்றனர். ஆனால் அமைச்சர் விவசாய பிரச்சனைகளுக்குப் பதிலாக ரம்மியில் மூழ்கியிருக்கிறார்” என தெரிவித்தார்.

காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவரான விஜய் வடெட்டிவார், “விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டாலும், அரசு மற்றும் அமைச்சர்கள் கவனிக்கவில்லை. பொய் மற்றும் ஏமாற்றுதான் இன்றைய மகாயுத்தி ஆட்சி” என கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், குற்றச்சாட்டுகளை மறுத்து அமைச்சர் மாணிக்ராவ் கோகடே விளக்கம் அளித்துள்ளார். “நான் ஆன்லைன் சீட்டாட்டம் விளையாடவில்லை. யூடியூபில் சட்டமன்ற செயலிகளைப் பார்க்க சென்றபோது, ரம்மி விளம்பரம் தற்செயலாக தோன்றியது. சில நொடிகளில் அதை மூடிவிட்டேன். அந்த இடைத்தருணத்தைக் கொளுத்தி வீடியோ எடுக்கப்பட்டது. இது அவதூறு நடவடிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முந்தைய மாதங்களில், “ஒவ்வொரு அரசுத் திட்டத்திலும் 3% முதல் 4% வரை ஊழல் உள்ளது” என கோகடே கூறியதுவும் ஏற்கனவே சர்ச்சையை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version