ஆன்லைன் சூதாட்ட வழக்கு : சுரேஷ் ரெய்னா, ஷிகார் தவான் சொத்துகள் முடக்கம் !

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகார் தவான் ஆகியோரின் ரூ. 11.14 கோடி மதிப்பு சொத்துகள் அமலாக்கத்துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் சூதாட்டம் சட்டப்படி தடைசெய்யப்பட்டிருந்தாலும், மொபைல் பயன்பாடுகள் வளர்ச்சியுடன் ஆன்லைன் சூதாட்ட தளங்கள் பெருமளவில் உருவாகியுள்ளன. இத்தகைய தளங்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டதாக பல புகார்கள் எழுந்துள்ளன.

அந்த வகையில், ‘1XBET’ எனும் ஆன்லைன் சூதாட்ட செயலி சமூக ஊடகங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் மக்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத்துறை கண்டறிந்தது. இதன் விளம்பரங்களில் சில பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர்களில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகார் தவான் ஆகியோரிடம் ஏற்கனவே ED விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, அவர்களது சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின்படி, சுரேஷ் ரெய்னாவின் ரூ. 6.64 கோடி மதிப்பிலான சொத்துகள், ஷிகார் தவானின் ரூ. 4.50 கோடி மதிப்பிலான சொத்துகள்
முடக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version