ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி, வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி டில்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், “பாரிமேட்ச்” என்ற ஆன்லைன் சூதாட்ட செயலியின் மூலம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு சுமார் ₹2,000 கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த செயலிக்கு விளம்பரம் செய்த பிரபலங்கள் மீது ஏற்கனவே விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 29 பிரபலங்கள் பெயர் பதிவாகியுள்ளது.
மேலும், சமீபத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மிமி சக்ரவர்த்திக்கும் ED சம்மன் அனுப்பியிருந்தது. இதன் அடுத்த கட்டமாக தற்போது ராபின் உத்தப்பாவுக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
